Friday, December 26, 2014

புலால் உணவால் வரும் கேடுகள்

                                 புலால் உணவால் வரும் கேடுகள்
மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? -திருக்குறள்- புலால் மறுத்தல்
தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?
‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல் – திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. திருவள்ளுவர் (அதிகாரம்: கொல்லாமை).
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.
கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் சொற்களை கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.
இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்
தங்கள்தேகம் நோய்பெறின்
தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும்
ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து
நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குல தெய்வமுங்கள்
உருக்குலைப்பது உண்மையே!
-சிவவாக்கியார் பாடல்
இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.
புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

Friday, December 19, 2014

மைந்தனா? மகனா? ஒரு விளக்கம்.

மைந்தனா? மகனா? ஒரு விளக்கம்.

பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருந்தாலும், ஆசையும் அன்பும் அதிகமாகும் போது அழைக்கப் பயன்படுத்துவது பெரும்பாலும் வேறு பெயராகத்தான இருக்கும். சிலர் தங்கமே, என் செல்வமே, மகனே, என் செல்லப்பிள்ளையே என்றெல்லாம் அழைப்பர். பாசமும் பரிவும் பொங்கி வரும்போது பொருள் அறிந்தும் அறியாமலும் பல பெயர்களில் அழைக்கிறோம்.
அதுபோல் இராமர் குழந்தையாக இருந்தபோது எப்படி அழைக்கப்பட்டார் என்பதன் மூலம் சில அரிய கருத்துக்களை விளக்குகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.

எந்தை வருக ரகுநாயக வருக
    மைந்த வருக மகனே யினிவருக
              என்கண் வருக எனதா ருயிர்வருக
விளக்கம்:
மைந்தனும் மகனும் ஒன்றா என்றால் இல்லை.
பாலகன் – பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையின் பெயர்.
எந்தை – என் அப்பா
மைந்தா -  தன் குடும்பம் மட்டுமில்லாது தெரிந்த மற்றும் தெரியாத ஊரில் உள்ள அனைத்துக் குடும்பத்தையும் காப்பாற்றக் கூடியவன்.
மகனே- தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்றுவன் மகன்.
பிள்ளை- தாய் தந்தைக்குத் தொல்லையாக இருப்பவன்.
என் கண்- என்னிடம் வா
எனதாருயிர் - என் ஆருயிர் 














Thursday, December 4, 2014

கீதை சொல்லும் பாதை…

கீதை சொல்லும் பாதை…

    பல்வேறு பிரச்சினைகளின் தொகுப்பே மனித வாழக்கை. பிரச்சினைகளோ சிறு தொந்தரவோ இல்லாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது. கடலில் இடைவிடாமல் அலைகள் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டுதான் இருக்கும். இதுபோல்தான் மனிதன் வாழ்விலும் பிரச்சனைகள் அடுக்கடுக்காகத் தொடர்ந்து ஏதாவது நிகழ்வதுதான் இயல்பு.
       மகாத்மா காந்தி கீதையைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு வாழ்ந்தவர். அதனால்தான் உலகத்தில் இதுவரை யாராலும் நிகழ்த்தமுடியாத அற்புதத்தை அவர் நிகழ்த்திக் காட்டினார். வானத்தில் ஒளி வீசித் திகழும் சூரியன். அதன் ஒளிக்கதிரின் ஆற்றல் அளவிட முடியாது. ஆனால் அந்த ஒளி வெள்ளத்தை ஒரு சிறு மேகக் கூட்டம் தடுத்துவிடும். அதுபோல்தான், மகத்தான ஆற்றலைப் பெற்ற மனிதனை அவன் மனதில் தோன்றும் சிறு கலக்கம், குழப்பம் அவனை இருட்டில் தள்ளிவிடும். அவன் ஆற்றலை மறைத்துவிடும் அவன் நிலை தடுமாறி விடுவான். இதிலிருந்து விடுபட்டு மனிதன் தன் முழு ஆற்றலுடன் செயல்படும் வழியைத்தான் கீதை சொல்கிறது.
           நம்மிடம் இருக்கும் நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும் ஏற்படும் போரையும், அதில் தீய குணத்தின் பிடியிலிருந்து நாம் எப்படி விடுபடலாம் என்பதையும் கீதை போதிக்கிறது. கீதையின் போதனையே மனிதன் கவலையில் இருந்து எப்படி விடிபடுவது என்பதுதான். பயத்திலிருந்து விடுபட்டுப் பயமில்லாமலும் மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் எப்படி வாழ்வது என்பதுதான். இறை சக்தியிடம் அசைக்க முடிக்க நம்பிக்கை உடையவன் எதற்கும் பயப்படமாட்டான். கலங்க மாட்டான். எப்போதுமே சமநிலையுடன் விளங்குவான்.
       கடவுளை நம்பவேண்டும் என்றால், கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்படிக் காண்பது என்ற கேள்வி எழும்.இதற்குப் பதிலாக,”இந்த எல்லையற்ற படைப்புதான் இறைவனின் தோற்றம்” என்று கீதை சொல்கிறது. மனிதன் கடமையைச் செய்யும்போது மனித மனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும் மோதல் ஏற்படும் போதுதான் கீதை பிறக்கிறது. தைரியம் இல்லாத இடத்தில் நல்ல சக்திகள் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். எல்லா நல்ல குணங்களும் தளபதி, அதிநாயகன் அஞ்சாமை, தைரியம் இப்படி இருபத்தாறு குணங்களைக் குறிப்பிட்டு கீதையில் இறுதியில் தற்பெருமை கொள்ளாமை என்ற குணத்தையும் பின் தளபதியாகக் கூறப்படுகிறது.
    இதை,
            வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
            நயவற்க நன்றி பயவா வினை.   என்கிறார் வள்ளுவர்.



Friday, November 28, 2014

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு பருப்பு

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு பருப்பு :-
கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.கொள்ளின் பலன்கள் கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.
கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.
சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்னையும் ஏற்படாது.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

நன்றி; இயற்கை உணவும் இனிய வாழ்வும்.

Friday, November 14, 2014

கிரந்த எழுத்துமுறை


                                    கிரந்த எழுத்துமுறை
  கிரந்தஎழுத்து முறை, தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிமாகும். கிரந்தம் என்றால் வடமொழியில் புத்தகம் என்று பொருள்.  புத்தகத்தில் எழுதப் பயன்படுத்த எழுத்துகள் கிரந்த எழுத்து முறை என்றழைக்கப்பட்டது. கிரந்த எழுத்துமுறை கி.பி 5-ஆம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்துமுறையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடமொழியை எழுதுவதற்காகத் தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களைச் செய்ததன் விளைவாகவாகக் கிரந்த எழுத்துமுறை தோன்றியதென்றும், எனவே அக்காலத் தமிழ் எழுத்துக்களின் நீட்சியே கிரந்த எழுத்துமுறை என்றும் கூறப்படுகிறது.
         கிரந்த எழுத்துக்களைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்கள் என்று அவர்களது கல்வெட்டுக்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. பல்லவர்கள் பயன்படுத்தியதால் அது பல்லவகிரந்தம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில் கிரந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சிறிது காலத்திற்குப்பின்னர் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெரும்பகுதி குறைந்து விட்டது.
மேலும் கிரந்த எழுத்துமுறை பற்றி அறிந்துகொள்ள… http://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை


Friday, October 31, 2014

தமிழின் தொன்மை வரலாறு
=======================

தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.

1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள்

2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துகள்

3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துகள்

4. இலக்கியச் சான்றுகள்

5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்

6. பழைய நாணயங்கள்

7. அரசுச் சாசனங்கள்

8. அரசர்களின் ஆவணங்கள்

9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)

10. கோயில் ஒழுங்குகள், கட்டடக்கலைகள், சிற்பங்கள்

இவை போன்ற சான்றுகள் பற்பல உள்ளன. தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன!

தமிழ்மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்த மொழி. இதற்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றின என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ன காலத்தில்தான் தோன்றின எனத் திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு, தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம்.

தொன்மைக் காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தில்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களைத் தமிழ்மொழி எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவை:

1. தென்பிராமி என்கிற தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துகள்
3. கோலெழுத்துகள்
4. மலையாண்மை

இவற்றுள் தென்பிராமி (எ) தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அரசர் அசோகர் தன் கல்வெட்டுகளில் பயன்படுத்திய எழுத்து பாலியும் பிராமியுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழ்நாட்டில், முதன் முதலில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் ‘தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை எனும் ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, ஏராளமான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்பதை 1924ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யராவார்.

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே! குமரிக்கண்டத்தில் கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே! பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டமெட்டினர்! பழம்பாண்டி நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டிச் சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக் கொண்ட திராவிடத் தமிழன், உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து உலகெங்கும் நிலைத்தான். நான்கு முறை ஏற்பட்ட கடல்கோள்களால் (சுனாமிகளால்) தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்தன.

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்ற பெருநகர நாகரிகத்தைப் படைத்த தமிழ்த் திராவிடன், வடக்கிலும், இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே!

இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்!


நன்றி; தமிழும் சித்தர்களும் முகநூல் பக்கம்.

Friday, October 24, 2014

சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

                          சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

சங்ககால மக்கள் இசைத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சிப்பண், பாலைப்பண், மருதப்பண், படுமலைப்பண், விளரிப்பண், காமரப்பண், ஆம்பல் பண் எனப் பல்வேறு பண்களையும் காலை, மாலை எனப் பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர். நரம்பு, துளை, தோல், கஞ்சம் என நான்கு வகையான இசைக்கருவிகளோடு குரலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.

இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின் வழி புள்ளினங்கள், விலங்கினங்கள் இசைக்கு மயங்கிய தன்மைகளையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யானை யாழோசைக்குக் கட்டுப்பட்டதை,
காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தாங்கியாங்கு’ (கலித்தொகை)
யானைப் பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானைகூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கியமை புலப்படுத்தப்படுகிறது.

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான் இன்னிசை கேட்டு பயம் நீங்கியதைக் கீழே உள்ள வரிகள் மூலம் உணரமுடியும்.

செந்நாய் வெரீஇ புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீர்இடைஅகநானூறு

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாம்பழ ஓட்டின் துளை வழியே வரும் வெப்பமான காற்று இனிய ஓசையோடு வருவதைக் கேட்கிறது. அவ்வோசை கோவலரின் குழலோசை என்றே கருதுகிறது.  அதனால் அச்சம் நீங்குகிறது என்பர் கயமனார்.

இசையின் இனிமையில் மயங்கிய கிளிகளைப்பற்றி,
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’(குறுந்தொகை)
இப்பாடலில் தினைகளில் விழும் கிளிகளை விரட்டச்சென்றாள் ஒரு தலைவி. குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். அங்கு வந்த கிளிகளோ குளிர் என்னும் இசைக்கு மயங்கின.
தலைவியின் குரலைத் தம் இனத்தின் குரலே என்று எண்ணிய கிளிகள் வேறிடம் செல்லாது அங்கேயே தங்கின. அதனால் வருந்திய தலைவி அழுதாள் இதையே இப்பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில் இசைக்கு கிளிகள் மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களையே மயக்கும் இசை ஆறறிவு படைத்த மனிதனை மேலும் மயக்குவதாக இருந்தது. மனிதன் தான் விரும்பிய இசையை மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தான்.