Friday, December 26, 2014

புலால் உணவால் வரும் கேடுகள்

                                 புலால் உணவால் வரும் கேடுகள்
மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? -திருக்குறள்- புலால் மறுத்தல்
தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?
‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல் – திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. திருவள்ளுவர் (அதிகாரம்: கொல்லாமை).
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.
கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் சொற்களை கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.
இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்
தங்கள்தேகம் நோய்பெறின்
தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும்
ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து
நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குல தெய்வமுங்கள்
உருக்குலைப்பது உண்மையே!
-சிவவாக்கியார் பாடல்
இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.
புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

Friday, December 19, 2014

மைந்தனா? மகனா? ஒரு விளக்கம்.

மைந்தனா? மகனா? ஒரு விளக்கம்.

பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருந்தாலும், ஆசையும் அன்பும் அதிகமாகும் போது அழைக்கப் பயன்படுத்துவது பெரும்பாலும் வேறு பெயராகத்தான இருக்கும். சிலர் தங்கமே, என் செல்வமே, மகனே, என் செல்லப்பிள்ளையே என்றெல்லாம் அழைப்பர். பாசமும் பரிவும் பொங்கி வரும்போது பொருள் அறிந்தும் அறியாமலும் பல பெயர்களில் அழைக்கிறோம்.
அதுபோல் இராமர் குழந்தையாக இருந்தபோது எப்படி அழைக்கப்பட்டார் என்பதன் மூலம் சில அரிய கருத்துக்களை விளக்குகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.

எந்தை வருக ரகுநாயக வருக
    மைந்த வருக மகனே யினிவருக
              என்கண் வருக எனதா ருயிர்வருக
விளக்கம்:
மைந்தனும் மகனும் ஒன்றா என்றால் இல்லை.
பாலகன் – பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையின் பெயர்.
எந்தை – என் அப்பா
மைந்தா -  தன் குடும்பம் மட்டுமில்லாது தெரிந்த மற்றும் தெரியாத ஊரில் உள்ள அனைத்துக் குடும்பத்தையும் காப்பாற்றக் கூடியவன்.
மகனே- தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்றுவன் மகன்.
பிள்ளை- தாய் தந்தைக்குத் தொல்லையாக இருப்பவன்.
என் கண்- என்னிடம் வா
எனதாருயிர் - என் ஆருயிர் 














Thursday, December 4, 2014

கீதை சொல்லும் பாதை…

கீதை சொல்லும் பாதை…

    பல்வேறு பிரச்சினைகளின் தொகுப்பே மனித வாழக்கை. பிரச்சினைகளோ சிறு தொந்தரவோ இல்லாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது. கடலில் இடைவிடாமல் அலைகள் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டுதான் இருக்கும். இதுபோல்தான் மனிதன் வாழ்விலும் பிரச்சனைகள் அடுக்கடுக்காகத் தொடர்ந்து ஏதாவது நிகழ்வதுதான் இயல்பு.
       மகாத்மா காந்தி கீதையைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு வாழ்ந்தவர். அதனால்தான் உலகத்தில் இதுவரை யாராலும் நிகழ்த்தமுடியாத அற்புதத்தை அவர் நிகழ்த்திக் காட்டினார். வானத்தில் ஒளி வீசித் திகழும் சூரியன். அதன் ஒளிக்கதிரின் ஆற்றல் அளவிட முடியாது. ஆனால் அந்த ஒளி வெள்ளத்தை ஒரு சிறு மேகக் கூட்டம் தடுத்துவிடும். அதுபோல்தான், மகத்தான ஆற்றலைப் பெற்ற மனிதனை அவன் மனதில் தோன்றும் சிறு கலக்கம், குழப்பம் அவனை இருட்டில் தள்ளிவிடும். அவன் ஆற்றலை மறைத்துவிடும் அவன் நிலை தடுமாறி விடுவான். இதிலிருந்து விடுபட்டு மனிதன் தன் முழு ஆற்றலுடன் செயல்படும் வழியைத்தான் கீதை சொல்கிறது.
           நம்மிடம் இருக்கும் நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும் ஏற்படும் போரையும், அதில் தீய குணத்தின் பிடியிலிருந்து நாம் எப்படி விடுபடலாம் என்பதையும் கீதை போதிக்கிறது. கீதையின் போதனையே மனிதன் கவலையில் இருந்து எப்படி விடிபடுவது என்பதுதான். பயத்திலிருந்து விடுபட்டுப் பயமில்லாமலும் மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் எப்படி வாழ்வது என்பதுதான். இறை சக்தியிடம் அசைக்க முடிக்க நம்பிக்கை உடையவன் எதற்கும் பயப்படமாட்டான். கலங்க மாட்டான். எப்போதுமே சமநிலையுடன் விளங்குவான்.
       கடவுளை நம்பவேண்டும் என்றால், கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்படிக் காண்பது என்ற கேள்வி எழும்.இதற்குப் பதிலாக,”இந்த எல்லையற்ற படைப்புதான் இறைவனின் தோற்றம்” என்று கீதை சொல்கிறது. மனிதன் கடமையைச் செய்யும்போது மனித மனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. நல்ல குணத்திற்கும் தீய குணத்திற்கும் மோதல் ஏற்படும் போதுதான் கீதை பிறக்கிறது. தைரியம் இல்லாத இடத்தில் நல்ல சக்திகள் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். எல்லா நல்ல குணங்களும் தளபதி, அதிநாயகன் அஞ்சாமை, தைரியம் இப்படி இருபத்தாறு குணங்களைக் குறிப்பிட்டு கீதையில் இறுதியில் தற்பெருமை கொள்ளாமை என்ற குணத்தையும் பின் தளபதியாகக் கூறப்படுகிறது.
    இதை,
            வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
            நயவற்க நன்றி பயவா வினை.   என்கிறார் வள்ளுவர்.