Friday, October 24, 2014

சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

                          சங்க இலக்கியங்களில் இசை மருத்துவம்

சங்ககால மக்கள் இசைத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சிப்பண், பாலைப்பண், மருதப்பண், படுமலைப்பண், விளரிப்பண், காமரப்பண், ஆம்பல் பண் எனப் பல்வேறு பண்களையும் காலை, மாலை எனப் பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர். நரம்பு, துளை, தோல், கஞ்சம் என நான்கு வகையான இசைக்கருவிகளோடு குரலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.

இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின் வழி புள்ளினங்கள், விலங்கினங்கள் இசைக்கு மயங்கிய தன்மைகளையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யானை யாழோசைக்குக் கட்டுப்பட்டதை,
காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தாங்கியாங்கு’ (கலித்தொகை)
யானைப் பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானைகூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கியமை புலப்படுத்தப்படுகிறது.

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான் இன்னிசை கேட்டு பயம் நீங்கியதைக் கீழே உள்ள வரிகள் மூலம் உணரமுடியும்.

செந்நாய் வெரீஇ புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீர்இடைஅகநானூறு

செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாம்பழ ஓட்டின் துளை வழியே வரும் வெப்பமான காற்று இனிய ஓசையோடு வருவதைக் கேட்கிறது. அவ்வோசை கோவலரின் குழலோசை என்றே கருதுகிறது.  அதனால் அச்சம் நீங்குகிறது என்பர் கயமனார்.

இசையின் இனிமையில் மயங்கிய கிளிகளைப்பற்றி,
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’(குறுந்தொகை)
இப்பாடலில் தினைகளில் விழும் கிளிகளை விரட்டச்சென்றாள் ஒரு தலைவி. குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். அங்கு வந்த கிளிகளோ குளிர் என்னும் இசைக்கு மயங்கின.
தலைவியின் குரலைத் தம் இனத்தின் குரலே என்று எண்ணிய கிளிகள் வேறிடம் செல்லாது அங்கேயே தங்கின. அதனால் வருந்திய தலைவி அழுதாள் இதையே இப்பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில் இசைக்கு கிளிகள் மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களையே மயக்கும் இசை ஆறறிவு படைத்த மனிதனை மேலும் மயக்குவதாக இருந்தது. மனிதன் தான் விரும்பிய இசையை மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தான். 

No comments:

Post a Comment