Friday, November 8, 2013

 
                             கடந்த ஆண்டு 6-ம் நிலை மாணவர்கள் வழங்கிய பாமாலை பாடல்களின் தொகுப்பு.  முதலில் அஷ்வின் ஹரி வழங்கிய புறநானூறு.....

                         

                                           புறநானூறு
                               கணியன் பூங்குன்றனார்


பாடல்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


 பொருள்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல்(இறப்பு) புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை.
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல (ஆற்றில் நீர் செல்லும் வழி தானே படகு செல்லும்)
இயற்கை வழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் (தக்கோர்=தகுந்தோர்)
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

நூல் விளக்கம்: 
புறநானூறு,  நானூறு பாடல்களைக்  கொண்ட  புறத்திணை  சார்ந்த  ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது.. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பொதுவாக புறம் பற்றிய 400 பாடல்களைக் கொண்டது புறநானூறு.
 
 ஆசிரியர் குறிப்பு:
 கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். வளம் நிறைந்த நாட்டைச் சேர்ந்தவரை அல்லது தலைவனைப் "பூங்குன்ற நாட[ன்]!" என்கிறது நாலடி நானூறு. இவ்வாறு தொழிலாலும் நாட்டாலும்  புகழ் பெற்றதால்    " கணியன் பூங்குன்றனார்" என்ற பெயர் பெற்றார்.




No comments:

Post a Comment