Friday, November 29, 2013

நித்யா நடேசன் வழங்கிய கம்ப இராமாயாணம்



கம்பராமாயணம் - கவிச் சக்கரவர்த்தி கம்பர் (1180 -280)
நித்யா:

கம்பரின் கவிச்சிறப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைசிறந்தது. நான் இப்பொழுது கம்பரின் கவிச்சிரிப்பிற்கு இரண்டு பாடலை உங்கள் முன் சொல்ல ஆசைப்படுகிறேன்.வஞ்சக எண்ணம் கொண்ட கைகேயி இராமரிடம், உனது தந்தை உனக்குச் சொல்லச் சொல்ல நான் இராமர் உனக்கு சொல்லலாமா என்று நயமாகப் பேசுகிறாள். அதற்கு இராமர் சொல்லும் பதில்தான் இந்தப் பாடல்.

மன்னவன் ஆணையைக் கூற இராமன் பணிந்துரைத்தல்: 

எந்தையே ஏவ, நீரே     உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்     பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய     வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;     தலைநின்றேன்; பணிமின்என்றான்.

நித்யா :இந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா? அப்பா கட்டளையிட, நீங்கள் அதை எனக்குச் சொல்ல நான் என்ன தவம் செய்தேனோ...எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீங்கள்தான் ....எனக்குக் கட்டளை இடுங்கள் என்கிறார் இராமர்.


கைகேயி தெரிவித்த மன்னின் ஆணை:

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ்
இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற்கொண்டு,
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டின் ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள்.

நித்யா:  இந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா? கடல் சூழ்ந்த இந்த உலகை பரதன் ஆளவேண்டும்.நீ கொடிய காட்டிற்குச் சென்று கடுமையான தவம் செய்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வா என்று உனது அரசன் சொன்னார் என கைகேயி சொல்கிறாள்.

Friday, November 22, 2013

அநிருத் ஸ்ரீனிவாசராகவன் எடுத்துரைத்த ஔவையாரின் மூதுரை




இந்த வாரம் அநிருத் ஸ்ரீனிவாசராகவன் எடுத்துரைத்த ஔவையாரின் மூதுரை மற்றும் அதைப் புரிந்து கொண்டு அவர் கூறிய கருத்துக்களும்.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்.

அநிருத் : குளத்தில் நீர் அளவைப் பொறுத்துத் தாமரை பூப்பது போல் கற்கும் நூல் அளவைப் பொறுத்து நம் அறிவு.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

அநிருத் : நல்லவர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேச்சைக் கேட்பதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் நன்று. அவர்களோடு தொடர்ந்து பழகி வருதல் மிகவும் நன்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

அநிருத் : நெல்லுக்கு விடும் நீர், புல்லுக்கும் போய் சேர்வது போல் நல்லவர்கள் உள்ள இடத்தில் பெய்யும் மழை மற்றவர்களுக்கும் போய்சேர்கிறது.

Friday, November 15, 2013

மூதுரை - ஔவையார்



     
ப்ரணவ் குமார் வழங்கிய மூதுரை.
                       மூதுரை
                          - ஔவையார்

நல்லவர்க்குச் செய்த உதவி

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
என்று தருங்கொல்? என வேண்டா- - நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.


பொருள்
தெங்கு - தென்னைமரம்

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கான பதில் உதவியும்,நன்றியும் எப்போது கிடைக்கும் என்று நினைத்துச்  செய்யக்கூடாது. தனக்கான  உணவை அதாவது நீரை வேர் மூலமாக எடுத்துக் கொண்டாலும், நன்கு வளர்ந்த பின்பு தென்னை மரம் அந்நீரைச் சுவையான  இளநீராகத் தந்துவிடும்.  அதுபோல  ஒருவர்க்குச் செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம்  நிச்சயம்  நன்மையைத்  தரும்.

மேன் மக்கள் இயல்பு

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

பொருள்
நட்புடன் பழகும் எண்ணமில்லாதவர்களிடம் நட்புடன் பழகினாலும் அவர்கள் நண்பர்களாகப் பழக மாட்டார்கள்.  தன்னுடைய  நிலை தாழ்ந்தாலும், நற்பண்புடையோர்  நண்பர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எத்தனை நேரம் காய்ச்சினாலும் சுவை குன்றாதப்  பாலையும், தீயிலிட்டுச் சுட்டாலும் தன்னுடைய நிறம் மாறாது மேலும் மேலும் வெண்மையாகும் சங்கினைப் போன்றதாகும் அவர்களுடைய  நட்பு.

காலமறிந்து நடத்தல்

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

பொருள்
நன்கு வளர்ந்து கிளைகளோடு கூடிய நீண்ட மரமாக இருந்தாலும் குறித்த பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேலும் மேலும்  எவ்வளவு  முயன்றாலும் நாம் செய்யும் செயல்களும்  அதற்குரியத் தகுந்த காலம் வந்தால் மட்டுமே பயன் அளிக்கும்.