Thursday, February 20, 2014

இந்த வாரம் அதுல் ஸ்ரீனிவாசராகவன் வழங்கிய கவிஞர் தாரா பாரதி அவர்களின் “வேலைகள் அல்ல வேள்விகள்!” கவிதை வரிகள்.


                      “வேலைகள் அல்ல வேள்விகள்!”
                                                                கவிஞர் தாரா பாரதி


கட்டை விரலை விடவும்
இமயம் குட்டை என்பதை எடுத்துச் சொல்!
உன் சுட்டு விரலின் நகமாய்
வானம் சுருங்கியதென்று முழக்கிச்சொல்!

தோள்கள் உனது தொழிற்சாலை
நீ தொடும் இடம் எல்லாம் மலர்ச்சோலை
தோல்விகளே உனக்கு இல்லை
இனி தொடுவானம் தான் உன் எல்லை!

கால்நகம் கீறிய கோடுகள் – வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் – உன்
தோள்கள் இரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலம் இடும்!

மண்புழுவல்ல மானிடனே உன்
மாவலி காட்டு மானிடனே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே – இவை
வேலைகள் அல்ல! வேள்விகளே!


அதுல் ஸ்ரீனிவாசராகவன்

சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் செய்வதை வேலையாக நினைக்காமல் சாதனையாகக் கருதி வெற்றிகரமாக முடிப்பதற்கு முயற்சி
செய்ய வேண்டும்.



Friday, February 7, 2014

இந்த வாரம் அர்ஜுன் சுவாமி வழங்கிய கவிஞர் தாரா பாரதியின் " வேலைகள் அல்ல வேள்விகளே "!

                               வேலைகள் அல்ல வேள்விகளே!
                                                                          கவிஞர் தாரா பாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்
உன் கைகளில் பூமி சுழன்று வரும்.

மூலையில் கிடைக்கும் வாலிபனே
உன் முதுகில் வேலையை தேடுகிறாய்
பாலை வனம் தான் வாழ்க்கை என
வெறும் பல்லவி எதற்குப் பாடுகிறாய்?

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கை புலி நீ தூங்குவதா?
நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கு எனத் தேடுவதா?

விழி விழி உன் விழி நெருப்பு விழி
உன் விழி முன் சூரியன் சின்னப் பொறி
எழு எழு தோழா உன் எழுச்சி
இனி இயற்கை மடியில் பெரும் புரட்சி!

அர்ஜுன் சுவாமி:
                       இந்தக் கவிதை நம்முள் இருக்குள் திறன்களை உணர்ந்து அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உழைப்பு உழைப்பு தரும் என்பதை ஆணித்தரமாகக் காட்டுகிறது இக்கவிதை.