Friday, May 15, 2015

ஒரு டீ சொல்லேன்...



டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?
வொயிட் டீ
இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
கிரீன் டீ
இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ஓலாங் டீ
பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.
ஐஸ் டீ
பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்.
மூலிகை டீ
துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
காபி
சிக்கரி என்பது ‘கெஃப்னைன் ஃப்ரி’ மூலிகை.  இது காபியில் சேர்க்கப்படும் மூலப்பொருள். காபி கொட்டையில் க்யூனைன் (Quinine) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், தலைவலியைப் போக்கும். நல்ல மனநிலையைத் தரும். பால் சேர்க்காமல் அளவாகக் குடித்தால், குடலில் வாழும் கெட்ட நுண்ணுயிரிகள் அழியும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ஈரலைப் பலப்படுத்தும்.
எப்போது காபி குடித்தாலும், சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். கருப்பட்டி, தேன் சேர்த்த காபியே சிறந்தது. நல்ல புத்துணர்ச்சி உடனடியாகக் கிடைக்கும். அடிக்கடி குடிக்காமல், ஒருநாளைக்கு ஒருமுறை எனக் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்.
பிரத்யேக சுவையுடன் காபி கடைகளில் கிடைக்கக்கூடிய காபி வகைகளை அளவாக எப்போதேனும் குடிக்கலாமே தவிர, தினமும் குடிக்கக் கூடாது. வெவ்வேறு சுவைகளிலும் தயாரிப்புகளிலும் கிடைக்கும், காப்பசினோ, எஸ்பிரஸ்ஸோ போன்ற காபிகள், சுவையை அள்ளித்தந்தாலும் நல்ல பலன்கள் அதில் இல்லை. 
ஶ்ரீமதி வெங்கட்ராமன்கிளினிகல் நியூட்ரிஷியன்

Friday, May 1, 2015

நீரின்றி அமையாது உடல்...

நீரின்றி அமையாது உடல்...
 ராஜ்குமார்பொது மருத்துவர்
ணவு, உடை, உறைவிடம் இல்லாவிட்டாலும் உயிர் வாழ முடியும். ஆனால், நீர் இல்லாமல் ஒரு சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஒருநாள் தண்ணீர் குடிக்காவிட்டால்கூட, உடல் சோர்ந்துபோகும். ஏனெனில், நமது உடல் 60 சதவிகிதம் திரவத்தால் ஆனது. உடல் முழுவதும் இருக்கும், உட்புற மற்றும் வெளிப்புற செல்கள் திரவத்தால்  சூழப்பட்டிருக்கும். இந்தத் திரவம், வற்றாமல் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க தண்ணீர் அவசியம்.
செல்களின் கவசம்: தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால், செல்களில் உள்ள ஈரப்பதத்தை உடல் எடுத்துக்கொள்ளும். பிறகு, நீர் பற்றாக்குறையால் சரும வறட்சி, உள்ளுறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து, ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள செல்களுக்குத் தந்து, அதன் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தத் தண்ணீர் உதவுகிறது. 
  
சிறந்த நச்சு நீக்கி: வியர்வை, மலம், சிறுநீர் வழியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவைச் செரித்து, ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து, கழிவுகளை வெளியேற்றும் பணியை கல்லீரல், சிறுநீரகம் செய்கின்றன. உணவை நகர்த்திச் செல்லவும், உணவை செரிக்கவும் வைக்கும் செயல்முறைக்குத் தண்ணீர் அவசியம். போதுமான அளவு நீர் அருந்தாவிடில், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீர்க்கடுப்பு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம்.
சமநிலைக்கு: மாறுகின்ற வானிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பம் மாறுபடும். உடலின் அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் உடல் தணித்து, குளிர்ச்சித் தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். இதனால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும். எனவே, உடலின் தண்ணீரைக் கவனிப்பது அவசியம்.
சரும பொலிவுக்கு: சருமம் சுவாசிக்கத் தண்ணீர் அவசியம்.  ஏ.சி அறையிலேயே இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காததால், சிலர் நீர் அருந்தாமலே இருப்பார்கள். இதனால், சருமம் களையிழந்து, உதடு வறண்டு போகும். இது, உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்பதற்கான அறிகுறி. 
சிறுநீரகத்தின் காவலன்: உடலில் போதுமான  தண்ணீர் இல்லாவிடில், சிறுநீரகங்கள் பெரிதும் பாதிக்கப்படும். உடலின் நச்சுக்களை நீக்க வழியில்லாதபோது, சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். ரத்தத்தைச் சீராக்கி, அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தத் தண்ணீர் அவசியம். 
 
சுகாதாரமான தண்ணீர்: உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.
வாட்டர் பாட்டில் ப்ளீஸ்
கையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். இது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நலம். சிறுநீர் மஞ்சளாகவோ, அடர் மஞ்சளாகவோ இருந்தால், உடலில் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரோடு அந்த நாளைத் தொடங்குங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் மடமடவென்று குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் குடிப்பதே சரி.
எது நல்ல தண்ணீர்?
பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீர் ஆகியவற்றில் சத்துக்கள் நீக்கப்பட்டு, செயற்கைச் சத்துக்கள் கலந்து விற்கப்படுவதால், எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என உறுதியாகச் சொல்ல முடியாது. நம் நிலத்தடி நீரே குடிக்க உகந்தது. நிலத்தடி நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டி பிறகு, குடிப்பது பாதுகாப்பானது.
தண்ணீர் தேவை?
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர்கள் நீர் அவசியம். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வோர், உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்பவர்கள், வெயிலில் அலைபவர்கள் இன்னும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீராக மட்டுமின்றி, நீர் நிறைந்த காய்கறி, பழங்களின் மூலமாகவும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
நன்றி
டாக்டர் விகடன்